எந்த ஒரு சமுதாயமும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.
(திருக்குர்ஆன் 13:11)

எந்தவொரு மாற்றம் சாத்தியமாவதற்கும் முன்னால் சிந்தனையில் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அம்மாற்றம் ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமெனில் அது திடமான அறிவின் அடித்தளம்மீது நிகழ வேண்டும்.

அந்த வகையில், அறிவுத் தளத்தைத் தேர்வுசெய்து மெய்ப்பொருள் அறக்கட்டளை செய்துவரும் விரிவான பணிகள் பற்றிய எளிய அறிமுகம் பின்வருமாறு.

திருக்குர்ஆனின் நிழலில்
சிறப்பு மொழியாக்கத் திட்டம் - 1

நவீனத் திருக்குர்ஆன் விரிவுரைகளில் தன்னிகரற்ற பேரிலக்கியமான "ஃபீ ழிலாலில் குர்ஆன்" எனும் தஃப்சீரை "திருக்குர்ஆனின் நிழலில்" எனத் தமிழில் 20 தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம். கருத்தாழத்திற்காகவும், சமகாலத் தன்மைக்காகவும், இலக்கியச் சுவைக்காகவும் பெரிதும் சிலாகிக்கப்படும் படைப்பு இது.

இது ஒரு களப்போராட்ட தஃப்சீர். அருள்மறையின் அர்த்தங்களை விளக்குவதற்கு முன்னோடியான ஓர் அணுகுமுறையை இது கையாண்டுள்ளது. அல்லாஹ்வுடைய புனித வேதத்தின் கருத்துகளைச் சமகாலச் சூழலிலும் உலக நிகழ்வுகளின் பின்னணியிலும் வைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது.

எத்தனையோ தஃப்சீர்கள் நம்மிடையே இருக்கின்றன. அவையெல்லாம் முன்சென்ற தலைமுறைகளின், சமூகங்களின் பார்வைகொண்டு குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளிக்க முற்படும் நிலையில், இந்தத் தஃப்சீரோ நம்முடைய சமூகச் சூழல், அரசியல் நிலைமைகளின் ஏற்ற இறக்கங்கள், மாற்றங்கள் ஆகியவற்றையொட்டி குர்ஆன் வசனங்களின் அர்த்தங்களைத் தெளிவுபடுத்துகிறது. எனவே, நடப்பு வாழ்க்கைச் சூழலில் நின்று எழுதப்பட்ட ஒரு தஃப்சீர் என்ற வகையில் இது மிகவுமே தனித்துவமானது.

எனவே, திருக்குர்ஆனின் அடிப்படையில் பார்வையைச் செதுக்கிக்கொள்ளவும், அதன் வற்றாத ஆழ்ந்த அர்த்தங்களை அள்ளிப் பருகவும் தமிழ்பேசும் நல்லுலகுக்குக் கிடைத்திருக்கும் ஓர் நல்வாய்ப்பு என்றே நாம் இதைச் சொல்ல வேண்டும்.

இதன் ஆசிரியர் சையிது குதுப் ஒரு குர்ஆனிய மனிதர். கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாதென உறுதியாக நின்று, அதற்காகத் தனதுயிரை ஈந்த மாவீரர். அவருடைய தலைசிறந்த இந்தப் பெருநூலை தமிழுக்குக் கொண்டுவருதில் மெய்ப்பொருள் அறக்கட்டளை பேருவகை கொள்கிறது.

சீர்மை நூல்வெளி
அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க ஒரு பதிப்பகம்

அறிவுத் தளத்தை ஆள்வோரே சமூகத்தை ஆள்வர். மட்டுமின்றி, இஸ்லாமிய அழைப்புப் பணி அடிப்படையில் ஓர் அறிவுப் பணியே. இத்தளத்தில் ஏனைய தரப்பினரின் நகர்வுகளோடு ஒப்பிட்டால் இஸ்லாமியத் தரப்பு மிகவும் பின்தங்கியுள்ளதை எவரும் அறிவர்.

இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கத்தில், நூல் பதிப்புத் துறையில் நல்ல அனுபவம் மிக்க வலுவான ஒரு குழுவை ஒருங்கிணைத்து, சீர்மை எனும் பதிப்பகத்தை உருவாக்கி, பரந்த வீச்சிலான தலைப்புகளில் அதிமுக்கியமான நூல்களை நேர்த்தியாகப் பதிப்பித்து வருகிறோம். அவை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி சமூகத்தின் பல மட்டங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

ஓராண்டுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். 4 முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள், 10 பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்கள், 3 எடிட்டர்கள், 1 கிராஃபிக்ஸ் டிசைனர் என இந்த இலக்கை நோக்கி மும்முரமாகப் பணிசெய்துவருகிறோம்.

திருக்குர்ஆன் விரிவுரைகள், இஸ்லாமிய வரலாறு, தமிழக முஸ்லிம்களின் சமூக-அரசியல்-பொருளியல் வரலாறு, ஆன்மிக மேம்பாடு, முஸ்லிம் வாழ்வியலைச் சித்தரிக்கும் இலக்கியம், இஸ்லாமிய மெய்யியல், முஸ்லிம்களின் சமூக-கலை-அறிவியல்-இலக்கியப் பங்களிப்புகள், இந்துத்துவ-இந்து தேசிய எதிர்ப்பு, சூழலியல், சமூக நீதி, சாதி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இவற்றுடன் அறிவியல், மருத்துவம், உளவியல், மானுடவியல் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த சிறந்த நூல்களையும் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறோம்.

மெய்ப்பொருள் வலைத்தளம்
சமூக-அரசியல் விமர்சனத்திற்கென வலைத்தளம்

அச்சிலும் டிஜிட்டல் வடிவிலும் செய்தி ஊடகங்கள் ஏராளம் உள்ளன. சமூக ஊடகங்கள் வழியாகவும் செய்திகள் உடனுக்குடன் நம்மை வந்தடைகின்றன.

எனினும், நம் கண்களையும் செவிகளையும் – அவற்றை ஊடுருவி நம் கருத்தையும் – நிரப்பும் இந்தச் செய்திப் பெருங்குவியல்களுக்கு மத்தியில் நாம் கவனத்தைக் குவிக்கத் தகுதியான விவகாரங்கள் எவை, நாம் அவற்றை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் தெளிவைப் பெறுவதில்தான் போதாமை நிலவுகிறது.

நாம் கவனம்செலுத்த வேண்டிய அத்தகைய விவகாரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சரியான சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்ள உதவும் ஒரு தளமே www.meipporul.in எனும் சமூக-அரசியல் விமர்சனத் தளம். மைய நீரோட்ட ஊடகங்கள் அரசின் கண்ணோட்டத்தையும், பெரும்பான்மையின் கண்ணோட்டத்தையுமே பிரதிபலிக்கும் நிலையில், மெய்ப்பொருள் தளம் கூர்மையான இஸ்லாமியக் கண்ணோட்டம் கொண்டு விவகாரங்களை அணுகி, ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் தரப்பையும் உரத்துப் பேசும் ஒரு சமரசமற்ற குரலாகப் பரிணமித்திருக்கிறது.

கட்டுரை, மொழிபெயர்ப்பு, நேர்காணல், நூல் திறனாய்வு, சினிமா விமர்சனம், குறும்பதிவு, காணொளி எனப் பல்வேறு வடிவங்களில் அமைந்த காத்திரமான ஆக்கங்கள் மெய்ப்பொருள் தளத்தின் அடையாளமாக மாறியிருக்கின்றன.

இஸ்லாமிய உலகநோக்கு, அரச பயங்கரவாதம், பார்ப்பனியம், இஸ்லாமோ ஃபோபியா, இந்திய-தமிழக அரசியல், காலனிய நீக்கம், பண்பாடு, இஸ்லாமிய அறிவுமரபு உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் தொடர்ந்து நிறைய ஆக்கங்களைக் கொண்டுவருகிறோம்.

www.readbetweenlines.com
ஊடகங்களின் போக்குகளை விமர்சிக்கவும், போலிச் செய்திகளை அம்பலப்படுத்தவும் ஒரு வலைத்தளம்

பெரும்பாலான ஊடகங்கள் அரசுகளைச் சார்ந்தோ, பெருநிறுவனங்களைச் சார்ந்தோதான் இயங்குகின்றன. பொதுமக்களிடையே வலுவாகச் செல்வாக்கு செலுத்திவரும் மையநீரோட்ட ஊடகங்களுக்குத் தெளிவான சார்புநிலை உண்டு. அது சாமான்யர்கள் பக்கமான சார்பு அல்ல என்பது மட்டும் நிச்சயம்.

ஒவ்வொரு ஊடகமும் எப்படிச் செய்திகளை வழங்குகிறது, செய்திகளை எவ்வாறு தேர்வுசெய்கிறது, எந்தெந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறது, எப்படியான செய்திகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது / தவிர்க்கிறது, துறைசார் வல்லுநர்களாக எவர்களை முன்னிறுத்துகிறது போன்ற அம்சங்களின் மூலம் அது எதன் பக்கம் ஒத்திசைந்து செல்கிறது என்பது புலப்படும். எனினும், பெரிய ஊடகங்கள் மிகவும் நுணுக்கமாக, எளிதில் புலப்படாத வகையில் தங்களது கருத்துநிலையை வெளிப்படுத்தக்கூடியவை.

எனவே, அனைத்து விதமான ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் மோசமான போக்குகள்மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பதோடு, ஆரோக்கியமான போக்குகளையும் முனைவுகளையும் ஊக்குவிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கிருக்கிறது. இந்த நோக்கத்தில் தொடங்கி நடத்தப்பட்டு வருவதுதான் www.readbetweenlines.com எனும் தளம்.

யூடியூப் சேனல்
இளையோரையும் ஈர்க்கக் காட்சி ஊடகம்

சிலவற்றை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கக் காணொளி வடிவம்தான் கச்சிதமானது. தமிழக முஸ்லிம் தரப்பிலிருந்து இது தொடர்பாகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலானவற்றில் தொழில்முறை நேர்த்தி இல்லாததால் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைப்பதில்லை. செய்திகளில் எவற்றைத் தேர்வுசெய்து கவனப்படுத்த வேண்டுமென்பதிலும் நிறைய பேரிடம் போதிய தெளிவில்லை. இப்போதாமைகளைக் களைந்து, நேர்த்தியான ஒரு காட்சி ஊடகத்தை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்க வேண்டுமெனும் எண்ணத்தில் பிறந்ததுதான் மெய்ப்பொருள் யூடியூப் சேனல்.

மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம்
வாசிப்புப் பண்பாட்டை வளர்க்க இலக்கிய வாசிப்பு வட்டம்

ஆளுமை உருவாக்கத்தில் வாசிப்புப் பழக்கத்துக்கு ஒரு முதன்மைப் பங்கிருக்கிறது. அதிலும், ஒரே விதமான நூல்களை மட்டும் வாசிக்காமல் பன்முக வாசிப்பை மேற்கொள்வதன் வழியாகவே அறிவை விசாலமாக்கிக்கொள்ள முடியும். இந்தப் பின்னணியில், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அதைச் சரியான திசையில் நெறிப்படுத்தவும், அவர்கள் தம் கருத்துகளை நேர்த்தியாகத் தர்க்க ரீதியில் எடுத்துவைத்து உரையாடும் பண்பை வளர்த்துக்கொள்ளவுமான ஒரு பயிற்சித் தளமாக “மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம்” எனும் மாதாந்திரக் கூடுகையைக் கடந்த 2019ம் ஆண்டுமுதல் சென்னையில் நடத்திவருகிறோம்.

இதில் மாணவர்கள் முதல் அரசியல் செயல்பாட்டாளர்கள் வரை பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாகவும் திரளாகவும் பங்கேற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

திருக்குர்ஆன் வாசிப்பு வட்டம்
குர்ஆனியக் கண்ணோட்டத்தை வார்த்தெடுக்க தஃப்சீர் வாசிப்பு வட்டம்

அல்லாஹ் திருக்குர்ஆனை “ஃபுர்கான்” (உரைகல்) என்று வருணிக்கிறான். ஆன்மிகம் முதல் அரசியல் வரை அனைத்துக்குமான உரைகல் அது. அவ்வாறு அனைத்தையும் நாம் குர்ஆனியக் கண்கொண்டு பார்க்க வேண்டுமென்றால், நமக்குக் குர்ஆனுடன் உயிரோட்டமிக்க ஓர் உறவு இருந்தாக வேண்டும்.

அத்தகைய உறவை வளர்த்தெடுக்க வேண்டுமெனும் நோக்கில் “திருக்குர்ஆன் வாசிப்பு வட்டம்” எனும் கலந்துரையாடல் நிகழ்வை மாதமிருமுறை சென்னையில் நடத்தி வருகிறோம். திருக்குர்ஆன் முழுவதையும் சிறுகச் சிறுக, கூட்டாக வாசித்து, கலந்துரையாடி, கிரகித்துக் கொள்வதற்கும், அதன்வழி ஓர் வலுவான குர்ஆனியக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும், எல்லாவற்றுக்குமான உரைகல்லாக அதை ஆக்கிக் கொள்வதற்குமாகத் தொடங்கப்பட்டுள்ள நெடும்பயணத்தின் ஆரம்பப்புள்ளி இது.

மெய்ப்பொருள் ஆய்வு உதவித் திட்டம்
ஆய்வாளர்களை உருவாக்கக் கல்வி உதவித் திட்டம்

முஸ்லிம் சமூகம் தொடர்பான விவகாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்படுவதும், ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயத்தின் இருப்புக்கும் செழிப்புக்கும் இது இன்றியமையாதது.

முஸ்லிம்களின் வரலாறு, கலை-இலக்கியப் பங்களிப்புகள், அரசியல் முனைவுகள், சமூக-பொருளியல் நிலை, முஸ்லிம்கள் வெவ்வேறு துறைகளில் எதிர்நோக்கும் சவால்கள், இஸ்லாமோ ஃபோபியா போன்ற அதிகம் கண்டுகொள்ளப்படாத துறைகளில் ஆய்வுகளை முன்னெடுக்க விரும்பும் மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்குவதோடு, அவர்களில் பொருளுதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்குக் கல்வி மற்றும் ஆய்வு உதவித் தொகைகள் வழங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இது தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதற்கும் “மெய்ப்பொருள் ஆய்வு நூலகம்” அமைக்கவும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம்.

அறக்கட்டளையின் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை அளியுங்கள்